ECONOMYMEDIA STATEMENT

பந்திங்கில் ஆடவர் அடித்துக் கொலை- இரு பாதுகாவலர்கள் கைது

பந்திங், ஜன 20- சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் நிகழ்ந்த கைகலப்பில் நபர் ஒருவரை அடித்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் இரு பாதுகாவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இம்மாதம் 11ஆம் தேதி இரவு மணி 10.45 அளவில் இங்குள்ள ஓலாக் லெம்பிட் பகுதியிலுள்ள மளிகைக் கடை ஒன்றின் அருகே இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்டுவான் முகமது நோர்  சாலே கூறினார்.

லோரி உதவியாளராக வேலை செய்து வந்த அந்த 24 வயது நபர் அப்பகுதியில் போதைப் பொருளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கிருந்த சிலருடன் கைகலப்பு மூண்டதாக அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் விநியோகத்தில் அவ்வாடவர் ஈடுபடுவதைக் கண்ட சிலர் அவரை கனமான பொருள்களால் தாக்கியுள்ளனர். இந்த கைகலப்பைக் கண்ட பொது மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு கிடந்த அவ்வாடவருக்குச் சொந்தமான பையை சோதனையிட்டு அதில் 2,000 வெள்ளி மதிப்புள்ள 3.93 கிராம் ஷாபு பொருள் 10 பொட்டலங்களில்  மடித்து வைக்கப்பட்டுள்ளதை கண்டனர் என்றார் அவர்.

அத்தாக்குதலால் கடுமையான காயங்களுக்குள்ளான அந்நபர் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் தலைமையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல் காரணமாக கடந்த திங்கட்கிழமை விடிற்காலை 2.15 மணி அளவில் அவர் உயிரிழந்ததாகவும் அகமது ரிட்வான் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் கடந்த 13 ஆம் தேதி பந்திங் வட்டாரத்தில் ஒரு நபரையும் மூன்று தினங்களுக்குப் பின்னர் மற்றொரு ஆடவரையும் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இதர ஆடவர்களைத் தாங்கள தொடர்ந்து தேடி வருவதாகவும் அவர் கூறினார்


Pengarang :