MEDIA STATEMENT

கொள்கலனில் வங்காளதேச சிறுவன் கண்டுபிடிப்பு- கிள்ளான் துறைமுகத்தில் சம்பவம்

ஷா ஆலம், ஜன 20- கிள்ளான் துறைமுகத்திலுள்ள மேற்கு துறைமுகத்தில் அந்நிய நாட்டுச் சிறுவன் ஒருவன் கொள்கலனில் இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.

வங்காளதேச துறைமுகத்தின் சிட்டகோங் துறைமுகத்திலிருந்து வந்த அந்த கப்பலில் இருந்த கொள்கனில் கடந்த ஆறு நாட்களாக அச்சிறுவன் சிக்கியிருந்ததாக நம்பப்படுகிறது.

நேற்றிரவு 9.00 மணியளவில் அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் கப்பல் நடவடிக்கை பிரிவின் பணியாளர் ஒருவரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ச்சா ஹோங் ஃபோங் கூறினார்.

மேற்கு துறைமுகத்தில் நங்கூரமிட்ட அக்கப்பலில் இருந்த காலி கொள்கலன் ஒன்றைச் சோதனையிட்ட போது அதில் அந்நிய நாட்டுச் சிறுவன் ஒருவன் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை அந்த பணியாளர் கண்டதாக அவர் சொன்னார்.

மருத்துவச் சோதனைக்காக அச்சிறுவன் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சிறுவனிடம் அடையாளப் பத்திரம் எதுவும் காணப்படவில்லை எனக் கூறிய அவர், இதன் தொடர்பில் மேல் கட்ட விசாரணை மேற்கொள்ள படுவதற்கு ஏதுவாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பல்வேறு விதமான சரக்குகளை ஏற்றிய எம்.வி. இண்டக்ரா எனும் அந்த ப்பல் கடந்த 12ஆம் தேதி சிட்டகோங் லிருந்து புறப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு துறைமுகத்தை வந்தடைந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

சிட்டகாங்கில் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அந்த கொள்கலனில் நுழைந்ததாகவும் எனினும், அதன் கதவு மூடிக்கொண்ட காரணத்தால் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :