ECONOMY

திருட வந்த வீட்டில் மது குடித்ததால் வந்த வினை- போதையில் ஆழ்ந்து உறங்கியவன போலீசில் வசமாக சிக்கினான்

சிரம்பான், ஜன 24- எடுத்த காரியத்தை முடிக்கும் முயற்சியில் எந்த சபலத்திற்கும் ஆட்படக்கூடாது. அப்படி ஆட்பட்டால் விபரீத முடிவுகளைச் சந்திக்க நேரும். இந்தக் கருத்து திருடனுக்கும் பொருந்தும் என்பது இங்கு நேற்று நிகழ்நத சம்பவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. 

பகாவ், தாமான் தஞ்சோங்கில் நேற்றிரவு வீடொன்றில் திருடச் சென்ற 41 வயது திருடன் அந்த வீட்டிலிருந்து மதுவைக் குடித்து போதையில் மயங்கி ஆழந்து உறங்கிப் போனான். வீட்டினுள் திருடன் நுழைந்ததை அதிகாலை 6.30 மணிளவில் உணர்ந்த 65 வயது உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த போலீசார் அவனை கையும் களவுமாக பிடித்தனர்.

கணவன், மனைவி தங்கள் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்த ஒற்றை மாடி தொடர் வீட்டில் அத்திருடன் நுழைந்ததாக ஜெம்புல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹோ சாங் ஹோக் கூறினார்.

வீட்டில் அதன் உரிமையாளர் வைத்திருந்த மதுபானத்தை குடித்ததால் போதைக்குள்ளான அந்த திருடன் அவ்வீட்டிலேயே ஆழந்து உறங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.

அதிகாலையில் எழுந்த வீட்டின் உரிமையாளர் திருடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவனது அருகில் இருந்த பையில் இரு கத்திகள், ஒரு ஸ்க்ரூ டிரைவர், இரு மதுபான போத்தல்கள் மற்றும் ஒரு கையடக்க கணினி ஆகியவை இருப்பதைக் கண்டுள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

வீட்டின் வேலியைத் தாண்டிக் குதித்த அந்த திருடன் பூட்டப்படாமல் இருந்த பின்புற கதவைத் திறந்து உள்ளே நுழைந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த பகுதியில் இரகசிய கண்காணிப்பு கேமரா எதுவும் காணப்படவில்லை. அந்த திருடன் 15 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதோடு தேடப்படும் நபர் பட்டியலிலும் இடம் பெற்றள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :