ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூரில் வெள்ளம்- நேற்று நள்ளிரவு வரை 2,912 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

ஜொகூர் பாரு, ஜன 25- ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம்
காரணமாக நேற்று நள்ளிரவு 12.00 மணி வரை மொத்தம் 2,912 பேர் துயர்
துடைப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். நேற்றிரவு 8.00
மணியளவில் இந்த எண்ணிக்கை 1,703ஆக மட்டுமே இருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

நேற்று புதிதாக 14 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ள
வேளையில் கோத்தா திங்கி, மெர்சிங், குளுவாங், சிகாமாட் ஆகிய
மாவட்டங்களில் உள்ள துயர் துடைப்பு மையங்களின் எண்ணிக்கை
தற்போது 30ஆக உயர்ந்துள்ளது என்று மாநிலப் பேரிடர் மேலாண்மை
செயல் குழு கூறியது.

வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சிகாமாட்
விளங்குகிறது. இங்குள்ள 13 துயர் துடைப்பு மையங்களில் 393
குடும்பங்களைச் சேர்ந்த 1,392 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு
அடுத்த நிலையில் உள்ள குளுவாங்கில் 223 குடும்பங்களைச் சேர்ந்த 785
பேர் ஒன்பது நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

கோத்தா திங்கியில் திறக்கப்பட்டுள்ள ஆறு துயர் துடைப்பு மையங்களில்
120 குடும்பங்களை சேர்ந்த 471 பேர் அடைக்கலம் நாடியுள்ள வேளையில்
மெர்சிங்கில் உள்ள இரு மையங்களில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 264 பேர்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கோத்தா திங்கி மாவட்டத்தில் மூன்று சாலைகள் தவிர்த்து
சிகாமாட் மாவட்டத்தில் உள்ள ஜாலான் செனாய்-கிம்மாஸ் மற்றும்
ஜாலான் ஜாபி-புக்கிட் தெம்புரோங் சாலைகளும் வெள்ளம் காரணமாகப்
போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.


Pengarang :