NATIONAL

சூதாட்டத்தில் ஈடுபட்ட 905 பேர் ஓப் லீமாவ் நடவடிக்கையில் கைது 

கோலாலம்பூர், ஜன 31- நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓப் லீமாவ் நடவடிக்கையில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 905 பேர் கைது செய்யப்பட்டனர். 

இம்மாதம் 15 முதல் 29ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட 137 சோதனை நடவடிக்கைகளின்  வாயிலாக மொத்தம் 513,793 வெள்ளி கைப்பற்றப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் (பி.டி.ஆர்.எம்.) செயலாளர் டத்தோ  நோர்ஷியா சாடுடின் கூறினார்.

இந்நடவடிக்கையில் கைதானவர்களில்  650 பேர் கட்டிட வளாகங்களுக்கு உள்ளே சூதாட்டத்தில் ஈடுபட்ட வேளையில் மேலும் 254 பேர் கட்டிடங்களுக்கு வெளியே சூதாட்டத்தில ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

சீனப்புத்தாண்டின் போது கட்டிடங்களுக்கு உள்ளும் வெளியிலும் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான இந்த இந்த ஓப் லீமா நடவடிக்கை 15 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

கைதானவர்களுக்கு எதிராக 1953ஆம் ஆண்டு பொது இட சூதாட்டச் சட்டத்தின் 6(1) மற்றும் 7(2) பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

கள்ள சூதாட்ட நடவடிக்கைளை ஏற்பாடு செய்வோர் மற்றும் அதில் கலந்து கொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :