SELANGOR

இலவசக் காப்பறுதி திட்டதில் மக்களைப் பதிவு செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கை

ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் அரசின் இலவசக் காப்புறுதித் திட்டத்தில் (இன்சான்) பொது மக்கள் விரைந்து பதிவதை உறுதி செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெர்மாத்தாங் தொகுதியில் சுமார் 2,000 பேர் இந்த திட்டத்தில் பதிவதற்குத் தாங்கள் உதவி புரிந்துள்ளதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார். இந்த திட்டத்திற்கான பதிவு இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுவதால் இந்நடவடிக்கையில் பொது மக்களுக்கு தாங்கள் தேவையான உதவிகளை நல்கி வருவதாக அவர் சொன்னார்.

இந்த இலவசக் காப்புறுதி திட்டம் தொடர்பில் சமூக ஊடகங்கள் வாயிலாக பொது மக்களுக்குத் தெரிவிக்கும் வேளையில் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை, தாவாஸ் நிதி வழங்கும் நிகழ்வு போன்ற பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த இலவசக் காப்புறுதி திட்டத்திற்குப் பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்த போதிலும் இன்னும் பலர் இத்திட்டத்தில் இன்னும் பதியாமலிருப்பதாக மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபாக்ருள்ராஸி மொக்தார் தெரிவித்தார்.

தொகுதி சேவை மையத்தின் வாயிலாகப் பொது மக்களை இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதன் தொடர்பில் உதவி பெற மக்கள் இன்று வரை எங்கள் சேவை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர் என்றார் அவர்.

இந்த இலவச காப்புறுதித் திட்டத்தை பொது மக்களிடம் கொண்டுச் செல்வதற்குக் கடிதங்கள் மற்றும் பதாகைகள் தாங்கள் பயன்டுத்தி வருவதாக கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் பலர் சொந்தமாக பதிவு செய்துள்ளனர். இருந்த போதிலும் அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்றார் அவர்.

மாநிலத்திலுள்ள 60 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் இந்த இலவசக் காப்புறுதித் திட்டத்தை மாநில அரசு தொடக்கியுள்ளது. பிறந்து 30 நாள் ஆன குழந்தை முதல் 80 வயது முதியோர் வரை பங்கு பெற வகை செய்யும் இந்த குழு காப்புறுதி திட்டத்திற்கு உண்டாகும் செலவுத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது.


Pengarang :