ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் உல்லாசக் கப்பல் விழா- மார்ச் மாதம் நடைபெறும்

ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் முதன் முறையாக உல்லாசக் கப்பல் விழா 2023 கோலக் கிள்ளான் உல்லாசக் கப்பல் முனையத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் டூரிசம் சிலாங்கூர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வாக இது விளங்குகிறது என்று சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இந்த உல்லாச கப்பல் விழாவையொட்டி  கிள்ளான் துறைமுகத்திற்கு வரவிருக்கும் சீபோர்ன் என்கோர் 211, மெய்ன் ஷிப் 5, ஸ்பெக்ட்ரம் ஆஃப் சீ 324 மற்றும் சில்வர் ஷேடோவ் 186 ஆகிய உல்லாசக் கப்பல்களை சுற்றிப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

இது தவிர, வாகன உணவு விற்பனை, சிலாங்கூர் சுற்றுலா மையங்கள் தொடர்பான கண்காட்சி மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் வரும் மார்ச் மாதம் 27 முதல் 30 வரை நடைபெறும் சீட்ரேட் க்ரூஸ் குளோபால் கான்வென்ஷன் 2023 மாநாட்டிலும் டூரிசம் சிலாங்கூர் கலந்து கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரை உல்லாசக் கப்பல்களின் மையமாக பிரபலப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் மார்ச் மாதம் 17 முதல் 19 வரை நடைபெறும் மாட்டா கண்காட்சியிலும் டூரிசம் சிலாங்கூர் பங்கேற்கும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :