ECONOMYMEDIA STATEMENT

கோல சிலாங்கூர் தைப்பூச நிகழ்வில்  இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட சமூகப் பணிகள்

கோல சிலாங்கூர், பிப் 7- சிலாங்கூர் மாநிலத்தில் தைப்பூச விழாவுக்கு பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான  ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற  சிலாங்கூர் மாநில அரசு நிலையிலான தைப்பூச நிகழ்வில் மக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த திட்டத்தின் கீழ் தைப்பூசத்தைக் கொண்டாட ஆலயத்திற்கு வரும் கோல சிலாங்கூர் வட்டார மக்களுக்கு இலவச பஸ் சேவை, “செரா சிஹாட்“ திட்டத்தின் கீழ் இலவச மருத்துவப் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் இலவச குடிநீர் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கை ஆகியவை சேவைகள் வழங்கப்பட்டதாக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் எம்.சிவபாலன் கூறினார்.

நேர்த்திக்கடன் செலுத்த ஆலயம் வரும் பக்தர்களின் வசதிக்காக மாநில அரசின் சார்பில் இலவச பஸ் சேவையை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்.நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூன்று பஸ்கள் இந்த சேவையில் ஈடுபட்டன.

புக்கிட் செராக்கா, டேசா கோல்பீல்டு, ஈஜோக், தென்னை மரம் தோட்டம், சுங்கை ரம்பாய் தோட்டம், பெஸ்தாரி ஜெயா ஆகிய பகுதிகளுக்கு இந்த இலவச பஸ் சேவை வழங்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் தவிர்த்து செரா சிஹாட் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு இலவச மருத்துவப் பரிசோதனையும் இங்கு மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

மேலும், வசதி குறைந்த தரப்பினரை இலக்காக கொண்டு இலவச கண் பரிசோதனையும் இங்கு நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 30 முதல் 40 விழுக்காடு கழிவு தொகையில் மூக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டது என அவர் சொன்னார்.

இது தவிர, இலவச குடிநீர் திட்டத்திற்கு பதிவு நடவடிக்கையை டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்புடன் இணைந்து ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இங்கு மேற்கொண்டது. மாநில அரசின் இந்த சலுகை திட்டத்தை பலர் அறிந்திராமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த பதிவு நடவடிக்கையை மேற்கொண்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

செரா சிஹாட் திட்டத்தில் சுமார் 300 பேர் பயனடைந்தனர். இலவச பஸ் சேவையை  பெற்றவர்களுடன் சேர்த்து  மாநில அரசின் திட்டங்கள் வாயிலாக பயனடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்றார் அவர்.

இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு 10,000 வெள்ளி வரை செலவு பிடித்ததாகவும் அந்த செலவுத் தொகையை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தில் இடம் பெற்றுள்ள நான்கு இந்திய கவுன்சிலர்களும் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :