ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,921ஆக உயர்வு

அங்காரா, பிப் 7- துருக்கியின் தென் பகுதியை நேற்று அதிகாலை உலுக்கிய பலமான நிலநடுக்கத்தில் இதுவரை 2,921 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15,834 பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவன அதிகாரி கூறினார்.

ரிக்டர் அளவில் 7.7 எனப் பதிவான அந்த நிலநடுக்கம் கஹாராமன்மாராஸ் பிரதேசத்திலுள்ள  பஸார்ஸிக் மாவட்டத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கடுமையாக உலுக்கியது.

இரண்டாவது நிலநடுக்கம் நேற்று பின்னிரவு 1.24 மணியளவில் கஹாராமான்மாராஸ் பிரதேசத்தின் எல்பிஸ்தன் மாவட்டத்தைத் தாக்கியது.

இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட 243 நில அதிர்வுகள் காரணமாக 6,217 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகப் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மைத் தலைவரை யூனுஸ் சஸிரை மேற்கோள் காட்டி அனாடோலு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை 65 நாடுகள் துருக்கிக்கு உதவ முன்வந்துள்ள வேளையில் 14,400 மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மொத்தம் 338,000 பேர் தங்கும் விடுதிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் துருக்கிய பிரதமர் ஃபுவாட் ஒக்டேய் கூறினார்.

இந்த நிலநடுக்கம் தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படாமலிருப்பதை உறுதி செய்ய அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வாயிலாக நடப்பு நிலவரங்களைப் பெறும்படி ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :