ECONOMY

இவ்வாண்டு சிலாங்கூர் வான் கண்காட்சியில் அதிக நிறுவனங்கள் பங்கேற்கும்- டத்தோ தெங் நம்பிக்கை

ஷா ஆலம், பிப் 10- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் இவ்வாண்டு நடைபெறவுள்ள வான் கண்காட்சியில் (எஸ்.ஏ.எஸ்.) அதிக விமான நிறுவனங்கள் பங்கேற்கும் என்பதோடு வருகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிகமான விமானங்களை காட்சிக்கு வைப்பதற்கு ஏதுவாக பெரிய இடம் தேவைப்படும என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் வருகையாளர்களின் வசதிக்காக சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய தமது தரப்பு முயன்று வருவதாக அவர்  சொன்னார்.

மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சியை ஸ்கைபார்க் வட்டார வான் போக்குவரத்து மையத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. கடந்த இரு முறை நடத்தப்பட்டதைக் காட்டிலும் இம்முறை விமானக் கண்காட்சிக்கு கூடுதல் இடம் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியை நடத்துவதற்கு பெரிய அளவிலான இடம் தேவைப்படும் நிலையில்  குறிப்பிட்ட அளவிலான இடம் மட்டுமே உள்ளது. எனினும், இப்பிரச்னையை சமாளிக்க முடியும் என நம்புகிறோம். அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் சிலாங்கூர் முதன் முறையாக வான் போக்குவரத்து கண்காட்சியை ஏற்று நடத்தியது. வான் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு உதவும் அதேவேளையில் இத்துறையில் உள்நாட்டு நிறுவனங்களும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினரும் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.


Pengarang :