ECONOMY

“சிப்ஸ்“ மாநாட்டிற்கு அமோக வரவேற்பு- கண்காட்சி இடத்தை விரிவாக்கம் செய்ய மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், பிப் 10- முந்தைய ஆண்டுகளை விட இவ்வாண்டில் கிடைத்துள்ள அமோக ஆதரவின்  அடிப்படையில் வருடாந்திர அனைத்துலக கண்காட்சி இடத்தை விரிவாக்கம் செய்வது குறித்து சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருகிறது.

“சிப்ஸ்“ எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அந்த மாநாடு நடைபெறும் கோலாலம்பூர் மாநாட்டு மையம் தவிர்த்து அருகிலுள்ள ஹோட்டல்களையும் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாம் கிம் கூறினார்.

டிரேடர்ஸ் ஹோட்டல் மற்றும் கிராண்ட் ஹையாத் ஹோட்டல் ஆகியவை இந்நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

கடந்தாண்டு இந்த மாநாட்டிற்கு கிடைத்த ஆதரவின் அடிப்படையில் இம்முறையும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆகவே, கூடுதல் இடங்களை குறிப்பாக மாநாட்டு மையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களை இம்மாநாட்டின் போது பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

மாநாடுகளும் இதர அங்கங்களும் ஹோட்டல்களில் நடைபெறும் வேளையில் கண்காட்சியை நடத்துவதற்கு மாநாட்டு மையம் பயன்படுத்தப்படும். எனினும், இதன் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு அக்டோபர் 6 முதல் 9 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிப்ஸ் 2022 அனைத்துலக வர்த்தக மாநாட்டில் 145 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தக பரிவர்த்தனை வாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்த மாநாட்டில் 35 கோடி வெள்ளி வர்த்தக பரிவர்த்தனை வாய்ப்புகளை பதிவு செய்ய முன்னதாக இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.


Pengarang :