ECONOMY

மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை நீர் விநியோகம் தொடங்கியது

ஷா ஆலம், பிப் 12- ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையப் பகுதியில் சுத்திகரிக்கப் படாத நீரில் டீசல் போன்ற வாடை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தடைபட்ட நீர் விநியோகம் இன்று அதிகாலை 6.30 மணி தொடங்கி முதல் வழக்க நிலைக்கு திரும்பத் தொடங்கியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோக நேரம் சம்பந்தப்பட்ட பகுதி அமைந்துள்ள இடம், நீர் அழுத்த அளவு உள்ளிட்ட அம்சங்களைப் பொறுத்து வேறுபடும் என்று ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே நீரில் வாடை மாசுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தின் 1,2 மற்றும் 3வது நிலையங்களில் சுத்திகரிப்பு பணி நிறுத்தப்பட்டதாக அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அந்த நீர் சுத்திகரிப்பு மையங்கள் முழு அளவில் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 6.30 மணி முதல் சுத்தமான நீரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர் விநியோகத் தேவை உள்ள இடங்களுக்கு டேங்கர் லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.


Pengarang :