MEDIA STATEMENTNATIONAL

முக்குளிப்பு பயிற்சியின் போது காணாமல் போன இராணுவ  வீரரின் உடல் மீட்பு

மலாக்கா, பிப் 20 - இம்மாதம் 7ஆம் தேதி புலாவ் உன்தான் கடல் பகுதியில்  முக்குளிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன மலேசிய ஆயுதப்படையின் கமாண்டோ லான்ஸ் கார்ப்ரல்  எட்ரின் பைண்டிம் (வயது 25) என்பவரின் உடல் தஞ்சோங் சிப்பாட் சதுப்புநிலப் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

 முழு முக்குளிப்பு  உடை மற்றும் உபகரணங்களுடன் காணப்பட்ட அவரது உடல் காலை 10.15 மணியளவில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் இயக்குனர் கேப்டன்  இஸ்கந்தர் இஷாக் கூறினார்.

ஜொகூர் பாரு கடல்சார் மீட்பு துணை மையத்திற்கு  கண்டாங் காவல் நிலையத்தின் மூலம் இந்த கண்டுபிடிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் சவப் பரிசோதனைக்காக அந்த வீரரின் உடல் பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதை சிறப்பு போர் பயிற்சி மையம் (புல்பாக்) உறுதிப்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

உடல் கண்டுபிடிக்கப்பட்டவுடன் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை பிற்பகல் 2.30 மணியளவில் நிறுத்தப்பட்டதோடு  இந்தோனேசியா தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்திற்கு  இது குறித்து  தெரிவிக்கப்பட்டது என்று அவர்  ஒரு அறிக்கையில் சொன்னார்.

காணாமல் போன அந்த முக்குளிப்பு வீரரின் உடல்  கிடைக்காததால் ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை கடல் சார் அமலாக்க நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது.

புலாவ் உன்தானுக்கு தென்மேற்கே 0.7 கடல் மைல் தொலைவில் முக்குளிப்புப் பயிற்சியில்  ஈடுபட்டிருந்தபோது அவர் பிப்ரவரி 7ஆம் தேதி காணாமல் போனார்.

Pengarang :