ECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனையில் ரொக்கமில்லா பரிவர்த்தனை- பி.கே.பி.எஸ். திட்டம்

ஷா ஆலம், பிப் 20- ஜெலாஜா ஏசான் ராக்யாட் (ஜே.இ.ஆர்.) மலிவு விற்பனையில் ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை அமல்படுத்துவது குறித்து சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) பரிசீலித்து வருகிறது.

இந்த நடைமுறையை அமல்படுத்துவதற்கு முன்னர் அதிலுள்ள இடர்பாடுகளை சரி செய்யும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடம் நிலையாக இல்லாமல் தினம் மாறுவது இத்திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே,  இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னர் இது குறித்து தீவிர ஆய்வினை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

மலிவு  விற்பனை சீராக நடைபெறுவதற்கும் வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைப்பதற்கும் ஏதுவாக இணைய பண பரிவர்த்தனை முறை அமல் செய்யப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கருத்து குறித்து கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தாலும் ரொக்கம் மற்றும் இணைய பரிவர்த்தனை ஆகிய இரு முறைகளையும் பி.கே.பி.எஸ். பயன்படுத்தும் என்றும் அவர் சொன்னார்

சில இடங்களில் இணைய சேவை அவ்வளவு சிறப்பாக இல்லாததை கருத்தில் கொண்டு இணைய பரிவர்த்தனையோடு ரொக்க பயன்பாட்டையும் தொடர்ந்து அமல்படுத்துவோம் என்றார் அவர்.


Pengarang :