ECONOMYSELANGOR

சிறப்பு வர்த்தக கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வீர்- இந்திய சமூகத்திற்கு மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், பிப் 20- புதிதாக வியாபாரத்தை தொடங்க  அல்லது வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய விரும்பும் இந்திய தொழில்முனைவோர் “சித்தம்“ எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

தொழில்முனைவோர் துறையில் திறனை மேம்படுத்துவதன் வாயிலாக வருமானத்தை உயர்த்தி அதன் மூலம் பொருளாதார ரீதியில் மேம்பாடு காண்பதற்கு உதவும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் திறன் பெற்ற சிறுதொழில் முனைவோராக இந்தியர்கள் உருவாக்கம் காண துணை புரிகிறது என்று அவர் சொன்னார்.

வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவோருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான மூலதனத்தைப் பெற விரும்புவோருக்கும் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

வர்த்தகப் பயிற்சி, வழிகாட்டல், வியாபாரத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்க நிதியுதவி உள்ளிட்ட அம்சங்களை இந்த  திட்டம் உள்ளடக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 4,500 தொழில்முனைவோருக்கு 7 கோடி வெள்ளி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

வர்த்தகத்தின் வழி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் சிலாங்கூர் மாநில மக்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறினார்.


Pengarang :