NATIONAL

ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 ஆக உயர்வு

கோலாலம்பூர், மார்ச் 2- ஜொகூர், பகாங், நெகிரி செம்பிலான், சபா மற்றும் மலாக்காவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 27,467ஆக உயர்ந்தது.
ஜொகூர் மாநிலத்தில் நேற்றிரவு 9,162 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 25,213ஆக உயர்ந்துள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

இந்த மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் பத்து பகாட் புதிதாக இணைந்துள்ள வேளையில் அம்மாநிலத்தில் 10 மாவட்டங்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அது தெரிவித்தது.

இம்மாநிலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகச் சிகாமாட் விளங்குகிறது. இங்குள்ள 55 துயர் துடைப்பு மையங்களில் 2,050 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குளுவாங்கில் உள்ள 39 துயர் துடைப்பு மையங்களில் 1,559 பேரும் கோத்தா திங்கியிலுள்ள 18 துயர் துடைப்பு மையங்களில் 769 பேரும் ஜொகூர் பாருவிலுள்ள 12 துயர் துடைப்பு மையங்களில் 607 பேரும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

பகாங் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 26 துயர் துடைப்பு மையங்களில் 374 குடும்பங்களைச் சேர்ந்த 1,375 பேர் தங்கியுள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இன்று அதிகாலை 4.00 மணி நிலவரப்படி 10 துயர் துடைப்பு மையங்களில் 197 குடும்பங்களைச் சேர்ந்த 704 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

மலாக்காவில், இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 21 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் நிவாரண மையங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நேற்றிவு 8.00 மணிக்கு இந்த எண்ணிக்கை எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேராக இருந்தது.


Pengarang :