SELANGOR

மந்திரி புசார் சிறப்பு உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் மார்ச் 14 வரை நீட்டிப்பு

ஷா ஆலம், மார்ச் 2- மந்திரி புசார் சிறப்புக் உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விண்ணப்பிதற்கான இறுதி நாள் மார்ச் 14ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடனுதவிக்கான விண்ணப்பங்களுக்கும் இந்த கால அவகாச நீட்டிப்பு பொருந்தும் என்று மாநில அரசு செயலாளர் அலுவலகம் கூறியது.

வெளிநாடுகளில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் (தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள்) உபகாரச் சம்பளம் மற்றும் கடனுதவியைப் பெறுவதற்குச் சிலாங்கூர் மாநில உபகாரச் சம்பள நிதியகத்திடம் ஜனவரி 26 முதல் மார்ச் 1 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் வரும் மார்ச் 14ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அலுவலகம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

விண்ணப்பம் மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து https://danapendidikan.selangor.gov.my/ என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 03- 55212275, 03-55447543 என்ற எண்களில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

உலகின் தலை சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் உபகாரச் சம்பளத்திற்கு அல்லது உபகாரச் சம்பளமாக மாற்றக்கூடிய கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய இந்த திட்டம் வகை செய்கிறது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டம் முதல் முனைவர் பட்டம் வரையிலான கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக இந்த உபகாரச் சம்பளத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


Pengarang :