NATIONAL

தீவு போல் காட்சியளிக்கும் சிகாமாட் நகர்- 80 விழுக்காட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்

சிகாமாட், மார்ச் 3- சிகாமாட் மாவட்டம் கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலிருந்து பார்க்கும் போது சிறு தீவுக் கூட்டம் போல் அப்பகுதி முழுவதும் காட்சியளிக்கிறது.

கடந்த திங்கள்கிழமை முதல் செய்து வரும் அடை மழை காரணமாக அம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் குடியிருப்பு பகுதிகள் யாவும் தீவுகளாக மாறி விட்டன.

அப்பகுதியில் உள்ள சுமார் 80 விழுக்காட்டு குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் முழுமையாகச் சூழ்ந்துள்ளது தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையுடன் பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

வெள்ளம் காரணமாகப் பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. சிகாமாட்டில் உள்ள கம்போங் தெனாங், கம்போங் ஜாவா போன்ற பகுதிகளில் வீடுகளின் கூரை வரையிலானப் பகுதி நீரில் மூழ்கியுள்ளதைக் காண முடிந்தது.

லாபில்ஸ் நகரிலுள்ள ஜூவாசே நீர்த்தேக்கத்திலும் நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் வழிகிறது. இப்பகுதியில் வெள்ள நிலை எவ்வளவு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்பது இதன் மூலம் உணர முடிகிறது.

இதுவரை பண்டார் சிகாமாட், சாஆ, லாபிஸ் ஆகிய மூன்று துணை மாவட்டங்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. அப்பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Pengarang :