ECONOMY

பண்டார் பாரு பாங்கி மார்க்கெட்டுக்கு  மந்திரி புசார் வருகை- அடிப்படை வசதிகளை மேம்படுத்த வணிகர்கள் கோரிக்கை

உலு லங்காட், மார்ச் 4- பண்டார் பாரு பாங்கி செக்சன் 1இல் அமைந்துள்ள பெரிய மார்க்கெட்டுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று வருகை புரிந்தார். அவரின் வருகையைக் கண்டு அங்குள்ள வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மந்திரி புசாரின் இந்த வருகையின் மூலம் இந்த மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் சங்கத்தின் பிரதிநிதி அகுஸ் சலிம் அப்துல வாகிட் கூறினார்.

மந்திரி புசார் இந்த மார்க்கெட்டுக்கு வருகை புரிந்தது குறித்து நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். அவரின் இந்த வருகை இந்த மார்க்கெட்டுக்கு மாறுதல்களை கொண்டு வரும் என நம்புகிறோம். காரணம், இந்த மார்க்கெட்டின் கூரை பழுதடைந்து நீர் ஓழுகுகிறது. உட்கூரை உடைந்து விட்டது. சுவரில் சாயமும் வெளுத்து விட்டது என்று அவர் சொன்னார்.

இந்த தொடர்பில் மந்திரி புசாரிடம் தாங்கள் கடிதம் சமர்ப்பித்துள்ளதாகவும் இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பட்டார்.

இந்த மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்த மார்க்கெட் வளாகத்திற்கு இன்று காலை தன் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன் வருகை புரிந்த அமிருடின் சுமார் 30 நிமிடங்களை அங்கு செலவிட்டு வணிகர்கள் மற்றும் பொது மக்களுடன் உரையாடியதோடு காலைச் சிற்றுண்டியிலும் கலந்து கொண்டார்.


Pengarang :