ECONOMY

பத்து லட்சம் மாணவர்கள் மார்ச் 20 முதல் காப்புறுதி பாதுகாப்பை இயல்பாகப் பெறுவர்

உலு லங்காட், மார்ச் 4- இம்மாதம் 20ஆம் தேதி புதிய பள்ளித் தவணை தொடங்கும் போது சிலாங்கூரிலுள்ள 20 லட்சம் மாணவர்கள் காப்புறுதிப் பாதுகாப்பை இயல்பாகப் பெறுவர்

தனியார் பள்ளி உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் படிவம் வரை பயிலும் மாணவர்களுக்கு அரசாங்க நிதியிலிருந்து பிரீமியத் தொகை செலுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

காப்புறுதி பாதுகாப்பை வழங்கக் கூடிய சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தில் (இன்சான்) பள்ளி மாணவர்களை இயல்பாக சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை ரமலான் மாதத்திற்கு முன்னர் செய்வோம் என்று அவர் சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற  உலு லங்காட் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்சான் காப்புறுதித் திட்டத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவுடன் மாநில அரசு பேச்சு நடத்தி வருவதாக அமிருடின் கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தார்.

இதனிடையே, இவ்வாண்டு இறுதிக்குள் இந்த காப்புறுதித் திட்டத்தில் ஐம்பது லட்சம் பேரை பதிவு செய்ய தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை முப்பது லட்சம் பேருக்கும் மேல் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். சுமார் எழுபது லட்சம் பேர் வசிக்கும் சிலாங்கூரில் 60 லட்சம் பேரை இத்திட்டத்தில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஏறக்குறைய அனைத்து சிலாங்கூர்வாசிகளையும் இத்திட்டத்தில் இணைப்பது எங்களின் நோக்கமாகும் என்று அவர் சொன்னார்.

 


Pengarang :