ALAM SEKITAR & CUACA

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்திற்கு தன்னார்வலர் குழுவை சிலாங்கூர் அனுப்பும்

உலு லங்காட், மார்ச் 4- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் குழுவை மாநில அரசு ஜோகூர் மாநிலத்திற்கு அனுப்பும்.

வெள்ளம் வடிந்தப் பின்னர் மேற்கொள்ளப்படவிருக்கும் சிலாங்கூர் மாநில அரசின் இந்த இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தில் தாமும் பங்கேற்கவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, தேவை ஏற்படும் பட்சத்தில் படகு உள்ளிட்ட இதர உபகரணங்களை அங்கு அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம். சிலாங்கூர் மாநிலத்திலும் வெள்ளத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

நேற்றுகூட சுங்கை பூலோவின் கம்போங் குபு காஜாவில் வெள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக நிலைமை கட்டுப்பாட்டில் இருந்ததோடு யாரும் நிவாரண மையங்களில் அடைக்கலாம் நாடவில்லை என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற உலு லங்காட் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா  சிலாங்கூர் நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, உணவு, தூய்மைப் பொருள்கள், பெம்பர்ஸ் உள்ளிட்ட முதல் கட்ட நிவாரண உதவிப் பொருள்களை சிலாங்கூர் அரசு இன்று ஜோகூர் மாநிலத்திற்கு அனுப்பியது.


Pengarang :