ACTIVITIES AND ADSPress StatementsYB ACTIVITIES

தாமான் டெம்ப்ளர் தொகுதியில் 506 பேர் பிங்காஸ் திட்டத்தில் மாதம் வெ.300 பெறுகின்றனர்

ஷா ஆலம், மார்ச் 10- தாமான் டெம்ப்ளர் தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த 506 பேர் மாநில அரசின் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) கீழ் மாத 300 வெள்ளி பெறுகின்றனர்.

கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை இந்த தகுதி உள்ள பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படுவதாக தொகுதி சேவை மையத்தின் அதிகாரி ரோஸ்லி கமாருடின் கூறினார்.

இந்த பிங்காஸ் திட்டத்திற்கு கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் இவ்வாண்டு தொடக்கம் வரை  1,530 விண்ணப்பங்கள் பெறப்பட்ட வேளையில் அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த 506 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மாதம் 3,000 வெள்ளிக்கும் கீழ் வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பள்ளிச் செல்லும் வயதுடைய பிள்ளைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டவர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் துறைகளிடமிருந்து உதவி பெறாதவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

முன்பு அமலில் இருந்த கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான கிஸ் திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு 10 கோடியே 80 லட்சம் வெள்ளி நிதியில் இந்த பிங்காஸ் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.


Pengarang :