ECONOMY

சிலாங்கூர் கூ வீடுகளுக்கு 120,000 விண்ணப்பங்கள்- நிர்ணயித்த இலக்கை விட இரு மடங்கு அதிக வரவேற்பு

சிப்பாங், மார்ச் 12- சிலாங்கூர் கூ வீடுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள சுமார் 120,000 பேரின் பட்டியலை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் கொண்டுள்ளது.

வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் 60,000 கட்டுபடி விலை வீடுகளைக் கட்டுவதற்கு மாநில அரசு நிர்ணயித்துள்ள இலக்கைக் காட்டிலும் இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும் என்று வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

அந்த விண்ணப்பதாரர்களில் ஏறக்குறைய பாதி பேருக்கு வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் வீடுகளை நிர்மாணித்துத் தந்தாலே போதுமானது எனக் கருதுகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற சிப்பாங் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

குறைவான விலையில் அதே சமயம் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள காரணத்தால் ரூமா இடாமான் மற்றும் ஹராப்பான் வீடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதாக அவர் சொன்னார்.

இந்த பிரிவு வீடுகள் குளிசாதனம், தொலைக்காட்சி, சமையலறை கோபினட், குளிர்பதனப் பெட்டி ஆகிய வசதிகளை கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த ஈராண்டுகளில் 42,000 ரூமா இடாமான் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த வீடமைப்புத் திட்டங்கள் பாதியில் கைவிடப்படாமலிருப்பதை உறுதி செய்யும்படி மேம்பாட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை 65,000 சிலாங்கூர் கூ மற்றும் ஹராப்பான் வீடுகளை நிர்மாணிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.


Pengarang :