SELANGOR

சிப்பாங், கோல லங்காட் மேம்பாடு புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும்- மந்திரி புசார்

ஷா ஆலம், மார்ச் 15- சிப்பாங் மற்றும் கோல லங்காட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பிரதேசத் திட்டம் (இட்ரிஸ்) மாநிலத்தில் புதிய முதலீட்டு மையத்தையும் தொழில்பேட்டைகளையும் உருவாக்கும் ஒரு ட்ரிலியன் வெள்ளி நிகர மேம்பாட்டு மதிப்பைக் கொண்ட இந்த திட்டத்தின் வாயிலாக சீரான தொழிலியல் பூங்காக்களை அமைக்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் உள்ளடங்கியுள்ள இந்த இட்ரிஸ் திட்டத்தில் சிலாங்கூர் பிஸ்னஸ் கேப்பிட்டல், கோல்ட் கோஸ்ட் குளோபல் வில்லேஜ் மற்றும் யுனிசெல் குளோபல் கேம்பஸ் ஆகியவையும் அடங்கியிருக்கும் என அவர் தெரிவித்தார்.

இவை தவிர, சிலாங்கூர் அனைத்துலக ஏரோபார்க், என்.சி.டி. விவேக தொழில்துறை பூங்கா, கேரித் தீவு துறைமுகம், கேரித் தீவு சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவையும் இடம் பெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மேம்பாட்டை நாம் பின்பற்றி நடந்தால் கோல லங்காட் மற்றும் சிப்பாங் மேம்பாட்டில் புதிய வடிவ மாற்றத்தைக் காண முடியும். இத்திட்டங்களின் அமலாக்கம் வாயிலாக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

என்.சி.டி. மற்றும் ஏரோபார்க் திட்டங்கள் மட்டும் 2,700 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இதன் மூலம் மேலும் அதிகமான முதலீட்டாளர்கள் வருவதற்குரிய சூழல் உண்டாகும் என்று கூறினார்.

மாநில அரசு தலைமைச் செயலகத்தின் வரவேற்புக்கூடத்தில் இட்ரிஸ் திட்டதை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :