ECONOMYSELANGOR

“சிப்ஸ்“ மாநாட்டை பிரபலப்படுத்த தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பேராளர் குழு பயணம்

ஷா ஆலம், மார்ச் 17- இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை (சிப்ஸ்) பிரபலப்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் மாநில பேராளர் குழு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்.

தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த பயணம் வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

சிப்ஸ் 2023 மாநாட்டை பிரபலப்படுத்துவதற்காக சில தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த சிப்ஸ் 2023 மாநாட்டை வெறும் சில்லறை வர்த்தக கண்காட்சியாக அல்லாமல் ஒரு வாணிகத் தளமாக  உருவாக்க விரும்புகிறோம் என்று நேற்று இங்கு ஸ்மார்ட் சிலாங்கூர் ராயா திட்டங்களை அறிவிக்கும் நிகழ்வில் அவர் சொன்னார்.

பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய மாநாட்டில் உரையாற்ற வருமாறு சம்பந்தப்பட்ட நாடுகளின் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுப்பதும் இந்த பயணத்தின் நோக்கமாகும் என்று தெங் தெரிவித்தார்.

முதலீட்டுத் துறையுடன் தொடர்புடைய, அமைச்சர்கள், அமைச்சின் அதிகாரிகள், துறை மற்றும் நிறுவனப் பிரதிநிதிகளைக் சந்தித்து அவர்களுக்கு இந்த மாநாடு குறித்து விளக்கமளித்து அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதையும் இந்தப் பயணம் இலக்காக கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் ஆசியான் நாடு ஒன்றின் அமைச்சர் பேச்சாளராக கலந்து கொள்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சிப்ஸ் 2023 மாநாடு கோலாலம்பூர் அனைத்துல வர்த்தக மையத்தில் வரும் அக்டோபர் 19 முதல் 22 வரை நடைபெறவுள்ளது.


Pengarang :