ECONOMYPENDIDIKAN

ஐந்து ஆண்டுகளில் 189 உயர்கல்வி மாணவர்களுக்கு வெ.42.7 லட்சம் உபகாரச் சம்பளம்- சிலாங்கூர் அரசு வழங்கியது

ஷா ஆலம், மார்ச் 17– சிலாங்கூர் அரசு கடந்த 2018 தொடங்கி இதுவரை 189 உயர்கல்விகூட மானவர்களுக்கு 42 லட்சத்து 73 வெள்ளியை உபகாரச் சம்பளமாக வழங்கியுள்ளது.

பதினோரு துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான தொகையில் ஒரு பகுதியை வழங்குவதற்காக சிலாங்கூர் மாநில உபகாரச் சம்பள சேமநிதி பயன்படுத்தப் பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டதாக கூறிய அவர், அந்த ஆண்டில் 103 மாணவர்களும் 2019ஆம் ஆண்டில் 18 மாணவர்களும் 2020இல் 18 மாணவர்களும் 2021 இல் 9 மாணவர்களும் 2022இல் 41 மாணவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர் என்றார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக உயர்கல்விக் கூடங்களை திறப்பதில் ஏற்பட்ட இடையூறு காரணமாக குறிப்பிட்ட சில ஆண்டுகளில் உதவி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று அவர் விளக்கினார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று செந்தோசா உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இது தவிர, பித்தாரா சிலாங்கூர் உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ் அயர்லாந்து  நாட்டின் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவருக்கு  கடந்த 2021ஆம் ஆண்டில் 10 லட்சம் வெள்ளியை மாநில அரசு உபகாரச் சம்பளமாக வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழும் மாணவர்களுக்கு  கல்வி நிதி வழங்கியுள்ளோம்.. படிப்பை முடித்தவுடன் சிலாங்கூர் மாநிலத்தில் அல்லது மாநில அரசின் துணை நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அத்தகைய சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது என அவர் கூறினார்


Pengarang :