ECONOMYSELANGOR

அனைத்து தொகுதிகளிலும் வெ.100,000 செலவில் சோலார் எல்.இ.டி. விளக்குகள்- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 17- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் சோலார். எனப்படும் சூரிய சக்தியில் இயங்கும் எல்.இ.டி. விளக்குகளை பொருத்துவதற்கு மாநில அரசு ஒரு லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இப்பணிக்கு தேவையான நிதி பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்டும் கட்டணத்தின் மூலம் பெறப் படுவதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

இந்த சோலார் விளக்குத் திட்டம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு சாலை விளக்குகளைப் பராமரிப்பதில் ஊராட்சி மன்றங்களுக்கு ஏற்படும் செலவினத்தையும் குறைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த சோலார் விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் எரிசக்தியை மிச்சப்படுத்தும் அதேவேளையில் சிலாங்கூரில் கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதற்கு ஏதுவாக பசுமைத் தொழில்நுட்பத்திற்கு மக்கள் மாறுவதையும் ஊக்குவிக்கிறது என்று அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தவிர அரசு சாரா அமைப்புகளும் பொழுதுபோக்கு இடங்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புகளில்  இத்தகைய சோலார் எல்.இ.டி.விளக்குகளை பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :