MEDIA STATEMENTPENDIDIKAN

25 வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி- மிட்லண்ட்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வழங்கியது

ஷா ஆலம், மார்ச் 20- இங்குள்ள செக்சன் 7, மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் பயிலும் வசதி குறைந்த 25 மாணவர்களுக்கு மிட்லண்ட்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம்  சார்பில் தலா 50.00 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டது. 

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும் சிரமத்தைக் குறைக்கும் நோக்கிலான இந்த நிதியுதவித் திட்டத்திற்கு ஆலயத்தின் சார்பில் 1,250 வெள்ளி செலவிடப்பட்டதாக ஆலயத் தலைவர் ரா.மோகன்ராஜ் கூறினார்.

ஆலயத்தின் சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வழஙகப்படுவதாக கூறிய அவர், கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்ட வேளையில் இவ்வாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 50.00 வெள்ளி ரொக்கமாக வழங்கப்படுகிறது என்றார்.

வழங்கப்படும் தொகை பெரியதாக இல்லாவிட்டாலும் பிள்ளைகளின் பள்ளிச் செலவுகளை ஈடுகட்டுவதில் பெற்றோர்கள் எதிர் நோக்கும் சுமையை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இத்தகைய உதவித் திட்டங்களை ஆலய நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் வாக்குறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி தேவமணி, வாரியத் தலைவர் உதயசூரியன், ஆலயச் செயலாளர் நா.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Pengarang :