MEDIA STATEMENTPENDIDIKAN

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் 216 வது போலீஸ் தினக் கொண்டாட்டம்- ஏ.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்

ஷா ஆலம், மார்ச் 20-  ஷா ஆலம், இங்குள்ள சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் 216வது அரச மலேசிய போலீஸ் படைத் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில்  ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி. கே.ராஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போலீஸ் தினத்தைக் கொண்டாடும் விதமாக கேக் ஒன்றை  வெட்டிய அவர், மாணவர்கள் மத்தியில் தன்முனைப்பு உரையும் நிகழ்த்தினார்.

காவல் துறை தினத்தை தமிழ்ப்பள்ளி நிலையில் நடத்துவது நாட்டில் இதுவே முதன் முறை என வர்ணித்த ராஜேந்திரன், இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகம்,மேலாளர் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

இன்று முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், மாணவர்கள் கல்வியிலும் கட்டொழுங்கிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

குற்றவாளிகளைப் பிடிப்பது மட்டும் காவல் துறையின் பணியல்ல. மாறாக, மக்களுக்கு உதவக்கூடிய சமூகப் பணிகளை ஆற்றுவதையும் அது தனது கடமையாகக் கொண்டுள்ளது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் தாமான் ஸ்ரீ மூடாவில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட போது நாங்கள் இரண்டு வாரம் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். காவல் துறை என்பது அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடிய ஒரு அமைப்பாகும். இந்தப் பணியில் சேருவோர் சரசாரி போலீஸ்காரராக மட்டும் இருக்கக் கூடாது. மாறாக இரவு, பகல், மழை, வெயில் எனப் பாராமல் பணியாற்றக்கூடியவர்களாக விளங்க வேண்டும் என்றார் அவர்.

குடிப்பழக்கம், ரவுடித்தனம் நிறைந்த சமூகம் என்ற அவப்பெயரிலிருந்து நமது சமூகம் மீள்வதற்கு மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் கட்டொழுங்குமிக்கவர்களாகவும் விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சு.விஜயலட்சுமி, பள்ளி மேலாளர் வாரியத் தலைவர்  சுகுமாறன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.சுகுமாறன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :