NATIONAL

முஸ்லீம் அல்லாத மாணவர்கள் குறைவாக இருந்தாலும் நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் செயல்பட வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 22- பள்ளிகளில் முஸ்லீம் அல்லாத மாணவர்களின்
எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தாலும் நோன்பு
மாதத்தின் போது சிற்றுண்டிச் சாலைகளை தொடர்ந்து நடத்தும்படி அதன்
நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முஸ்லீம் அல்லாத அனைத்து மாணவர்களும் குறிப்பாக சிறுவயதினர்
நோன்பு இருக்க மாட்டார்கள் என்பதோடு அவர்களை மதிக்க வேண்டும்
என்பதையும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக
கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

இது மடாணி (நாகரீக) அரசாங்கம். இது அனைவரையும்
உள்ளடக்கியுள்ளது. நோன்பு நோற்பவர்களை நோன்பு நோற்காதவர்களும்
நோன்பு நோற்காதவர்களை நோன்பு நோற்பவர்களும் மதித்து நடக்க
வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் கிடங்கினுள்ளோ அல்லது கால்வாய் ஓரத்திலோ அமர்ந்து
உணவு உண்ணும் சூழல் ஏற்படக்கூடாது. அத்தகைய சூழல்
ஏற்படுவதையும் காண நான் விரும்பவில்லை என்றார் அவர்.

முஸ்லீம் சிறார்கள் நோன்பு இருக்க மாட்டார்கள் என்பதோடு அவர்கள்
நோன்பு இருப்பதும் கட்டாயமல்ல. நோன்பு இருப்பது குறித்து கற்றுக்
கொள்ளும் ஆர்வம் இருந்தாலன்றி அவர்கள் நோன்பை கடைபிடிக்க
வேண்டியதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

யாயாசான் பெட்ரோனாஸ் ஏற்பாட்டில் இங்குள்ள ஜாலான் பத்து சிறப்பு
பள்ளியில் நடைபெற்ற பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

நோன்பு மாத த்தில் காண்டீன்களைத் திறப்பது தொடர்பில் அதன்
நடத்துநர்களுடன் பள்ளி நிர்வாகங்கள் பேச்சு நடத்த வேண்டும் என்றும்
அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :