NATIONAL

தற்கொலை முயற்சி தொடர்பான சட்டத்தை அகற்ற அரசாங்கம் திட்டம்

ஷா ஆலம், மார்ச் 22- நெருக்குதல் மற்றும் மனநலப் பிரச்சனைக் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ள முயல்வோரைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக தண்டனைச் சட்டத்தின் 309வது பிரிவை அகற்ற அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.

தற்கொலை முயற்சியை குற்றச்செயலாக அல்லாமல் சுகாதாரப் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்று சட்டம் மற்றும் அமைப்பு சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சர் ராம் கர்ப்பால் சிங் கூறினார்.

தற்கொலை செய்து கொள்ள முயல்வோர் உனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சீரான மனநிலையில் இல்லத அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று தண்டனைச் சட்டத்தின் 309வது பிரிவை அகற்றுவது தொடர்பில் கூச்சிங் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் கெல்வின் யீ லீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சட்டத்தை அகற்றுவது தொடர்பில் அமைச்சு தேசியச் சட்டத்துறை தலைவர் அலுவலகம் வாயிலாக விரிவான ஆய்வினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதன் தொடர்ச்சியாக இந்த சட்டத்தை அகற்றவதற்கு முன்னர் கொள்கைகள் மற்றும் சில சட்ட வரைவுகளை இறுதி செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.


Pengarang :