ECONOMYSELANGOR

விபத்துக்கு சாலைத் தடுப்புச் சோதனை காரணமா? சாலை போக்குவரத்து இலாகா மறுப்பு

ஷா ஆலம், ஏப் 1- மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் விபத்துக்குள்ளானதற்கு தாங்கள் மேற்கொண்ட சாலைத் தடுப்புச் சோதனை காரணம் எனக் கூறப்படுவதை சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) மறுத்துள்ளது.

விபத்தின் காரணமாக சாலையில் விழுந்து கிடக்கும் மோட்டார் சைக்கிளோட்டியின் அருகே இரு ஜே.பி.ஜே அதிகாரிகள் நிற்பதை சித்தரிக்கும் படங்களும் குரல் பதிவுகளும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக மாநில சாலை போக்குவரத்து இலாகா நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

உண்மையில் அவ்விரு அதிகாரிகளும் விரைந்து உதவிகளை வழங்கிய அதேவேளையில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்ததாக அது தெரிவித்தது.

இச்சம்பவம் கடந்த மாதம 28ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் நிகழ்ந்தது. செலாட் கிளாங் உத்தாரா நெடுஞ்சாலையில் பண்டார் சுல்தான் சுலைமானிலிருந்து ஷா ஆலம் நோக்கிச் செல்லும் தடத்தில் ஜே.பி.ஜே அதிகாரிகள் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த போது விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சாலையில் விழுந்து கிடப்பதைக் கண்டனர் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலந் தாழ்த்தாது முதலுதவி வழங்கிய அதிகாரிகள்  சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். அதோடு மட்டுமின்றி 999 என்ற எண்களில் மருத்துவக் குழுவிரை அழைத்து உதவியும் கோரினர்.

அந்த ஆடவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கள் கட்டுப்பாட்டை இழந்த தால் இந்த விபத்து நேர்ந்துள்ளது தொடக்க க்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் அவ்வறிக்கை தெரிவித்தது.


Pengarang :