MEDIA STATEMENTNATIONAL

தற்கொலை முயற்சியை குற்றமற்ற செயலாக வகைப்படுத்த மலேசியா நடவடிக்கை

கோலாலம்பூர், ஏப் 4- தற்கொலை முயற்சியை குற்றமற்றச் செயலாக வகைப்படுத்த மலேசியா நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்ட மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓதமான் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள சட்டத்துறை சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

கட்டாய மரண தண்டனை அகற்றம், மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை குறைப்பு மற்றும் ஆயுட்காலம் சிறைத் தண்டனை நீக்கம் ஆகிய தீர்மானங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றம் நேற்று வாக்களித்த ஒரு தினத்திற்கு பிறகு தற்கொலை தொடர்பான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்கொலை புரிய முயல்வோருக்கு ஓராண்டு வரையிலான சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க நடப்புச் சட்டம் வகை செய்கிறது.

தற்கொலை முயற்சியை குற்றத் தன்மையற்றதாக ஆக்க அரசாங்கம் விரும்புகிறது. ஆயினும், தற்கொலைக்கு உதவுவது மற்றும் துணைபோவது ஆகியவை இன்னும் குற்றச் செயல்களாகவே கருதப்படும் என அசாலினா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சிறார்கள் மற்றும் மனநல குறைபாடு உள்ளவர்களை தற்கொலைக்குத் தூண்டும் அல்லது உதவி புரியும் நபர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக அவர் சென்னார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் 631 ஆக இருந்த தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 2021 இல் 1,142ஆக அதிகரித்ததாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கடந்தாண்டு கூறியிருந்தார்.


Pengarang :