NATIONAL

செம்பனை எண்ணெய்க்கு இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறை- அரசு பரிசீலனை

கோலாலம்பூர், ஏப் 5- உள்நாட்டுத் தேவைக்கான சமையல் எண்ணெய் விலையை கட்டுப் படுத்துவதற்கு ஏதுவாக அந்த உணவு மூலப் பொருளுக்கு இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் தாங்கள் சம்பந்தப்பட்ட தொழில் துறையினருடன் பேச்சு நடத்தி வருவதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை துணையமைச்சர் செனட்டர் பவுசியா சாலே கூறினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இதன் தொடர்பான பரிந்துரை வாழ்க்கைச் செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்றத்திடம் சமர்பிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

செம்பனை எண்ணெயின் மொத்த உற்பத்தியில் ஆறு விழுக்காடு மட்டுமே உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதன் அடிப்படையில் நாங்கள் ஏற்கனவே இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறை தொடர்பில் அறிக்கை தயாரித்துள்ளோம். எனினும், அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டுத் தேவைக்கு ஒன்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிக்கு ஒன்றுமாக இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறை அமல்படுத்தப்படும் என்பது இதன் பொருளாகும் என அவர் சொன்னார்.

மேலவையில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :