SELANGOR

3,355 குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி பராமரிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 6: ஐந்து மற்றும் ஆறு வயதுடைய மொத்தம் 3,355 குழந்தைகள், மழலையர் பள்ளி பராமரிப்பு ஊக்கத்தொகை மாதம் 100 ரிங்கிட்டைப் பெற வாய்ப்புள்ளதாக யாயாசன் வாரிசான் அனாக் சிலாங்கூர்  அறிவித்துள்ளது.

உதவி நிறுவன மேலாளர் ஷரிசான் முகமட் ஷெரீப் கூறுகையில், சிலாங்கூர் மழலையர் பள்ளி உதவித் திட்டத்திற்கான (துனாஸ்) பதிவு, உதவி பெறும் குடும்பங்கள் உண்மையிலேயே தகுதியுடையதா என்பதை உறுதிப்படுத்த இன்னும் திறந்தே உள்ளது.

“சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு மழலையர் பள்ளிக்கும் வேலை செய்யும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

“ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படும். இந்த RM100 ஊக்கத்தொகை நேரடியாக மழலையர் பள்ளி உரிமையாளருக்கு வழங்கப்படும்” என்று சிலாங்கூர்கினியிடம் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் பிறந்து வாழும் குழந்தைகளைத் தவிர RM5,000க்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படுவதாக ஷரிசான் கூறினார்.

“மற்றொரு நிபந்தனை என்னவென்றால், தாய் மற்றும் தந்தை இருவரும்  இம்மாநில வாக்காளர்களாகப்  பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்த உதவியைப் பெற http://tunas.yawas.my/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் கேள்விகள் இருந்தால் 03-5481 8800 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது யாவாஸ் முகநூல், இன்ஸ்டாகிரம் போன்ற சமூகப் பக்கங்கள் மற்றும் யாவாஸ் டிவியின் “யூ டியுப்பை“  பார்வையிடலாம்.


Pengarang :