ECONOMYNATIONAL

மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு ஆறு மாநிலங்களில் நடைபெறும்

ஷா ஆலம், ஏப் 24- அமைச்சர்கள் பங்கேற்கும் மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு இம்மாதம் 29 ஆம் தேதி தொடங்கி மே 14ஆம் தேதி வரை ஆறு மாநிலங்களில் நடைபெறும்.

இந்த பொது உபசரிப்பு சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் பாஹ்மி பாட்சில் கூறினார்.

இந்த பொது உபசரிப்பின் முதல் நிகழ்வு அலோர்ஸ்டார் ஹோட்டல் ராய்யாவில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் என்று அவர் சொன்னார்.

பினாங்கு மாநில நிலையிலான இரண்டாவது நிகழ்வு மே 6ஆம் தேதி பெர்மாத்தாங் பாவ், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநில பொது உபசரிப்பு சிரம்பான் மாநகர் மன்றத் மண்டபத்தில் மே 7ஆம் தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் கிளந்தான் மாநில  நிலையிலான உபசரிப்பு கோத்தா பாரு, நான்காவது சுல்தான் மாமுட் அரங்கில் மே 12ஆம் தேதி இரவு 7.00 மணி முதல் 10.30 மணி வரையிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாவது பொது உபசரிப்பு திரங்கானு, சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில் மே 13ஆம் தேதி இரவு 7.00 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறவிருக்கிறது.

இந்த பொது உபசரிப்பின் உச்சக் கட்ட நிகழ்வு சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக்கில் மே 14ஆம் தேதி நடைபெறும். பத்து கேவ்ஸ், வர்த்தக மையத்தில் இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்பார்.

இந்த மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து சிறப்பிக்குமாறு மலேசியர்களை பாஹ்மி கேட்டுக் கொண்டார்.


Pengarang :