ECONOMY

தானா திங்கி லோஜிங்கில் மித மிஞ்சிய காய்கறிகள் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை

அலோஸ்டார், ஏப் 24- தானா திங்கி லோஜிங்கில் காய்கறிகளின் உற்பத்தி
சந்தையின் தேவைக்கும் அதிகமாக உள்ளதால் சுமார் 500
தோட்டக்காரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும்
நடவடிக்கையில் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு
ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டு காய்கறி தோட்டக்காரர்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக காய்கறி
விநியோகம் சீராக உறுதி செய்யும் முயற்சியில் அவர்களுக்கு உரிய
அலோசக சேவையை வழங்கும் நடவடிக்கையிலும் ஃபாமா எனப்படும்
கூட்டரசு விவசாயப் பொருள் சந்தை வாரியம் ஈடுபட்டு வருவதாக
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.

சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் சந்தையை விட அதிக
விலையில் காய்கறிகளை அவர்களிடமிருந்து ஃபாமா கொள்முதல்
செய்கிறது. எனினும் இந்த நடவடிக்கை நீண்ட கால அடிப்படையில்
இப்பிரச்சினைக்கு தீர்வினைத் தராது என்று தெரிவித்தார்.

உள்நாட்டு காய்கறிகளும் இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளும்
சமஅளவில் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் அமைச்சு
ஈடுபட்டு வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற கெடா மாநில நிலையிலான விவசாய மற்றும்
உணவு உத்தரவாத அமைச்சு மற்றும் அமானா கட்சியின் நோன்புப்
பெருநாள் பொது உபசரிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளால்
உள்நாட்டுச் சந்தையில் காய்கறிகள் மிதமிஞ்சி காணப்படுவதால் தானா
திங்கி லோஜிங்கில் உள்ள விவசாயிகள் விற்கப்படாத டன் கணக்கான
வேளாண் உற்பத்தி பொருட்களை வீச நேர்ந்ததாக ஊடகங்கள்
அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.


Pengarang :