SELANGOR

ஜெலஜா எஹ்சான் ரக்யாட் 2.0 திட்டத்தின் மூலம் RM7.71 மில்லியன் பதிவு

ஷா ஆலம், ஏப்ரல் 27: ஜெலஜா எஹ்சான் ரக்யாட் (JER) 2.0 திட்டம் ஜனவரி முதல் நான்கு மாதங்களில் மொத்த விற்பனை மதிப்பு RM7.71 மில்லியனாக பதிவு செய்துள்ளது.

சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகக் குழு (PKPS) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி, இந்தத் திட்டம் RM3.75 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் சேமிக்க உதவியதாகக் கூறினார்.

“448 இடங்களை உள்ளடக்கிய சிலாங்கூர் முழுவதும் உள்ள 56 தொகுதிகளில் நடத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இந்தத் தொகை எட்டப்பட்டது. அதிகம் விற்பனையாகும் பொருட்கள் கோழி, அரிசி மற்றும் முட்டை ஆகியவை அடங்கும்.

“மானியச் செலவுகள் உட்பட கிட்டத்தட்ட RM12 மில்லியன் செலவில், சிலாங்கூர் மக்களுக்காகச் சந்தையை விட 30 சதவீதம் மலிவான விலையில் அடிப்படைத் தேவைகளை இத்திட்டத்தில் வழங்க முடியும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஜெலஜா எஹ்சான் ரக்யாட் ஐடில்பித்ரி நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும், அடுத்த வாரம் முதல் இத்திட்டம் வழக்கம் போல் தொடரும் என்றும் அவர் விளக்கினார்.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிய linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.


Pengarang :