ECONOMY

சிலாங்கூர் அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் 90,000 பேர் பங்கேற்பர்- மந்திரி புசார் நம்பிக்கை

ஷா ஆலம், ஏப் 28- சிலாங்கூரிலுள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்று தொடங்கி கட்டங் கட்டமாக நடத்தப்படவுள்ள மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் 90,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டிபித்ரி எனும் இந்த நிகழ்வில் பல்வேறு பதார்த்தங்கள் அடங்கிய விருந்து வழங்கப்படுவதோடு கலை நிகழ்ச்சிகளும் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்ட பதிவும் நடைபெறும் என்று மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பொது உபசரிப்புக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு மாநில மக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வு இன்று சிப்பாங்கில் தொடங்கி நாளை சனிக்கிழமை உலு சிலாங்கூரிலும் ஞாயிற்றுக்கிழமை கிள்ளானிலும் நடைபெறும் என்றார் அவர்.

பெர்மோடேலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (பி.என்.எ.ஸ்.பி.) ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட மந்திரி புசாரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது டாருள் ஏசான் மலேசியா ஆதரவற்றோர் இல்லம் மற்றும் காசே ஹர்மோனி பாயா ஜெராஸ் இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்த 50 பேருக்கு நோன்புப் பெருநாளையொட்டி பண அன்பளிப்புகளை வழங்கினார்.


Pengarang :