ACTIVITIES AND ADSECONOMY

பண்டார் உத்தாமா தொகுதியில் 300 குடும்பங்களுக்கு பிங்காஸ் திட்டத்தின் கீழ் வெ.3,600 நிதியுதவி

ஷா ஆலம், ஏப் 28- பண்டார் உத்தாமா தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் “பிங்காஸ்“ எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர்.

இந்த தொகுதியில் பிங்காஸ் திட்டத்தின் கீழ் 502 பேர் பயன்பெறுவதற்கு கோட்டா ஒதுக்கப்பட்ட வேளையில் 202 பேருக்கான கோட்டா இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக பண்டார் உத்தாமா தொகுதி ஒருங்கிணைப்பு அதிகாரி ஹனிஸ் முகமது கூறினார்.

எங்களுக்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. எனினும், அவர்கள் பண்டார் உத்தாமா தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்யாத காரணத்தால் அவை நிராகரிக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

மாதம் 300 வெள்ளி அல்லது ஆண்டுக்கு 3,600 வெள்ளி வழங்க வகை செய்யும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும் என்பதோடு மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றார் அவர்.

சிலாங்கூரில் பிறந்தவர்களாகவும் இம்மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களாகவும் 18க்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது இதர நிபந்தனைகளாகும் என்று அவர் மேலும் விளக்கினார்.

எஞ்சியுள்ள 202 பேருக்கான கோட்டாவையும் வரும் ஜூன் மாதத்திற்குள் பூர்த்தி செய்வதற்காக கிராமத் தலைவர்கள் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கிஸ் மற்றும் கிஸ் ஐ.டி. எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான உதவித் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 10 கோடியே 80 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இந்த பிங்காஸ் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது


Pengarang :