MEDIA STATEMENTNATIONAL

போலீஸ் குடியிருப்பின் 11வது மாடியிலிருந்து விழுந்து 4 வயதுச் சிறுமி பலி

கோலாலம்பூர், ஏப் 29- போலீஸ் குடியிருப்பின் 11வது மாடியிலிருந்து தவறி விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே.8 போலீஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் காலை 11.35 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் அச்சிறுமி வீட்டின் வரவேற்புக் கூடத்திலி விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவரின் தாயார் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

திடீரென அறை ஒன்றின் கதவு பலத்த ஓசையுடன் மூடப்படும் சத்தம் கேட்டு தாயார் ஓடிச் சென்று கதவைத் திறக்க முயன்றுள்ளார். எனினும் கதவு தானாக பூட்டிக் கொண்டதால் அதனைத் திறக்க இயலாமல் போனது என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அறையில் சிக்கிக் கொண்ட மகள் உதவிக் கோரி கூச்சலிட்டுள்ளார். அவரின் தாயார் மற்றொரு அறையின் சன்னல் வழியாக வெளியில் பார்த்த போது மகள் மாடியிலிருந்து கீழே விழுந்தது தெரிய வந்தது என்று வான் அஸ்லான் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவப் பணியாளர்கள் அச்சிறுமி உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர். பரிசோனைக்காக அவரின் உடல் செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அச்சிறுமியின் மரணத்தில் சூது ஏதும் நிகழவில்லை எனக் கூறிய அவர், இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.


Pengarang :