NATIONAL

இன, அரசியல் வேறுபாடின்றி அனைவருக்கும் உதவத் தயார்- ஷா ஆலம் எம்.பி. அஸ்லி யூசுப் உறுதி மொழி

கிள்ளான், ஏப் 30- இன, சமய மற்றும் அரசியல் கட்சி வேறுபாடின்றி
அனைத்து மக்களுக்கும் உதவிகளை வழங்க தாங்கள் தயாராக உள்ளதாக
ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் கூறினார்.

குறிப்பாக, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை
மேற்கொள்ளும் அரசு சாரா அமைப்புகளுக்கு உதவுவதில் வேறுபாடு
பார்க்கப்படாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கோட்பாட்டிற்கு ஏற்ப அரசியல் வேறுபாடு
இன்றியும் இன சமய வேறுபாடுகளைப் பார்க்காமலும் உதவித்
தேவைப்படும் அனைவருக்கும் கரம் கொடுக்க நான் தயாராக உள்ளேன்
என்றார் அவர்.

மலேசியா பல இன, சமய மற்றும் கலாசார பின்னணியைக்
கொண்டிருந்த போதிலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும்
தனித்துவத்தைக் கொண்ட நாடாக விளங்குகிறது என்றும் அவர் மேலும்
குறிப்பிட்டார்.

ஷா ஆலம் நற்பணி மற்றும் சமூக நல மேம்பாட்டு மன்றத்தின் நேற்றிரவு
இங்கு நடைபெற்ற நல்லெண்ண விருந்து நிகழ்வுக்கு தலைமை தாங்கி
உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானியம் தற்போது மீண்டும்
அதிகரிக்கப்பட்டுள்ளதால் சமூகப் பணிகளில் தீவிரம் காட்டும் அரசு சாரா
அமைப்புகளுக்கு உதவுவதற்குரிய வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளதாக
அவர் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான மானியம் 30 விழுக்காடாக குறைக்கப்பட்டது.
எனினும், தற்போது நாட்டின் பொருளாதாரம் சீரடையத்

தொடங்கியுள்ளதால் மானியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
பழையபடி உயர்த்தியுள்ளார் என அவர் சொன்னார்.

அரசு சாரா அமைப்புகள் மக்கள் நலன் சார்ந்த பணிகளை சீராக
மேற்கொள்வதற்கு ஏதுவாக அவற்றுக்கு சிறிய அளவிலான குத்தகைத்
திட்டங்களை வழங்குவதற்கான சாத்தியத்தையும் தாங்கள் ஆராய்ந்து
வருவதாக அவர் சொன்னார்.

சமூகப் பணிகளை மிகவும் சிறப்பான முறையில் மேற்கொண்டு வரும்
ஷா ஆலம் நற்பணி மற்றும் சமூக நல மேம்பாட்டு மன்றத்திற்கு தனது
சார்பில் 3,000 வெள்ளியை மானியமாக வழங்குவதாகவும் அவர்
அறிவித்தார்.


Pengarang :