ECONOMYMEDIA STATEMENT

வாகன நெரிசலைக் குறைக்க சுபாங் ஜெயா வழிபாட்டுத்தலப் பகுதியில் வெ.70 லட்சம் செலவில் திட்டம்

சுபாங் ஜெயா, மே 4– பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் ஜாலான் லிங்காரானில் 70 லட்சம் வெள்ளி செலவில் சுற்று வட்டச் சாலையை சன்வே குரூப் நிறுவனம் அமைக்கவுள்ளது.

இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக இப்பகுதியில் உள்ள மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளதாக சுபாங் ஜெயா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல்  இங் மேய் ஸி கூறினார்.

இந்த பகுதியில் சுபாங் ஜெயா பௌத்த ஆலயம், ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், மற்றும் குருத்வாரா சாஹிப் ஆகிய மூன்று வழிபாட்டுத் தலங்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விழாக்கள் நடைபெறும் போது மூன்று வழிபாட்டுத் தலங்களிலும் தலா 10,000 பக்தர்கள் வரை திரண்டு விடுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்சனை ஏற்படுகிறது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள சுபாங் ஜெயா பௌத்த ஆலயத்தில் விசாக தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்   செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சன்வே குரூப் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான டான்ஸ்ரீ டாக்டர் ஜெப்ரி சியா மற்றும் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜாலான் லகூன் செலாத்தானை இணைக்கும் இந்த சுற்றுவட்டச் சாலைத் திட்டமும் 90 இடங்களைக் கொண்ட கார் நிறுத்துமிடமும் இன்னும் ஈராண்டுகளில் நிர்மாணிக்கப்படும் என மிஷல் இங் தெரிவித்தார்.


Pengarang :