ECONOMY

கோவிட்-19 நிலை மீதான இடர் மதிப்பீடு ஜூன் மாதம் மேற்கொள்ளப்படும்

மூவார், மே 7– கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான இடர்  மதிப்பீட்டை அரசாங்கம் வரும் ஜூன் மாத மத்தியில் மேற்கொள்ளவிருக்கிறது. அந்நோய்த் தொற்று இனி உலக சுகாதார அவசரகாலப் பிரிவில் இடம் பெறாது என்ற உலக சுகாதார நிறுவனத்தின் முடிவைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான அண்மைய பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய அடுத்த இலக்கை அரசாங்கம் தீர்மானிப்பதற்கு முன்னர், வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் தொற்றுநோய் மீதான உள்ளுர் பகுதிகளின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாக கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

இந்த நோய்த் தொற்று இனியும் உலக சுகாதார அவசர நிலையாக வகைப்படுத்தப்படாவிட்டாலும் உள்நாட்டில் ஏற்படும் பரவல்களை சுகாதார அமைச்சு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) தொடர வேண்டும் என நுட்பக்குழு நிலையில் நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வரும் நோய்த் தொற்று பகுதிகளை நாங்கள் தொடர்ந்து நிலை நிறுத்துவோம் என அவர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் நோய்த் தொற்று பரவல் இன்னும் உள்ளதை கருத்தில் கொண்டு சமீபித்திய மாற்றங்களை கண்காணிக்க விரும்புகிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் முடிவை ஏற்பதற்கு முன்னர் அந்நிறுவனத்தின் கருத்துகளையும் நாட்டின் நிலைமையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, வரும் ஜூன் மாதம் இது குறித்து முடிவெடுப்போம் என்றார் அவர்.


Pengarang :