MEDIA STATEMENT

மஞ்சோங்கில் போதைப்பொருள் பதனீட்டுக் கூடத்தை போலீசார் முற்றுகை-15 கிலோ ஹெரோயின் பறிமுதல்

ஈப்போ, மே 27- போதைப்பொருளை பதப்படுத்தும் ஆய்வுக் கூடமாகவும் பொட்டலமிடும் இடமாகவும்  பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மஞ்சோங்கில் உள்ள ஒரு வீட்டை போலீசார் கடந்த செவ்வாய்கிழமை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையின் மூலம் மஞ்சோங்கில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் விநியோகக் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

 இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் பதப்படுத்தும் கருவிகள் மற்றும் 199,727  வெள்ளி மதிப்புள்ள 14.9 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதோடு நான்கு உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ் ரி ஹசன் பஸ்ரி கூறினார்.

கடந்த நான்கு மாதங்களாக இப்பகுதியில் தீவிரமாக செயல்பட்டு  வந்த இக்கும்பலை  போலீசார் அணுக்கமாக கண்காணித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

 புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை பிற்பகல் 1.30 மணி அளவில் நடத்திய இச்சோதனையில் 23 முதல் 52 வயதுடைய நான்கு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர்  தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ததை தொடர்ந்து இக்கும்பல் தொடர்புடையவர் என நம்பப்படும் 25 வயதுடைய மற்றொரு ஆடவர்  தைப்பிங், போகோக் அசாமில்  கைது செய்யப்பட்டார் என்று முகமட் யூஸ்ரி சொன்னார்.

 அனைத்து சந்தேக நபர்களும் எந்த வகையான போதைப்பொருளும் பயன்படுத்தவில்லை என்பதை அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில்  கண்டறியப்பட்டது.  அந்த ஐந்து சந்தேக நபர்களில் நான்கு பேர் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான கடந்த கால பதிவுகளைக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

ஒரு வாகனம் உட்பட கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு 239,727  வெள்ளியாகும். இந்த கைது நடவடிக்கை மூலம் போதைப்பொருள் பதப்படுத்தும் கும்பலை அழிக்க முடிந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 அனைத்து சந்தேக நபர்களும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39 பி பிரிவின் கீழ் விசாரணைக்கு மே 24 முதல் 30 வரை ஏழு நாட்களுக்கு  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்


Pengarang :