ECONOMYSELANGOR

மலிவு விற்பனைக்கு மக்கள் ஆதரவு- பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

சுபாங் ஜெயா, மே 29- லெம்பா சுபாங் 1, காலைச் சந்தை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

ஸ்ரீ செத்தியா தொகுதி நிலையில் நடைபெறும் இந்த மலிவு விற்பனையில் சுமார் 500 பேர் கலந்து கொண்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இந்த மலிவு விற்பனை காலை 10.00 மணிக்கு தொடங்கிய போதிலும் காலை 8.00 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததாக அவர் சொன்னார்.

அனைத்து பொது மக்களுக்கும் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த மலிவு விற்பனையில் வரிசை எண் முறையைப் பயன் படுத்தினோம் இந்த விற்பனையில் அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டதால் கோழி, முட்டை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது என்றார் அவர்.

 இந்த மலிவு விற்பனை கடந்தாண்டு தொடங்கியது முதல் மூன்றாது முறையாக இந்த தொகுதியில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.  உணவுப் பொருட்கள் மலிவாக விற்பனை செய்யும் இத்திட்டத்தில் பங்கேற்க பொது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதோடு இத்தகைய விற்பனைகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு வசிப்பர்களில் பெரும்பாலோர் நகர்ப்புற ஏழைகளாவர். நகர்ப்புறங்களில் வசித்த போதிலும் அவர்கள் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பின் பாதிப்பை அதிகம் எதிர்நோக்குகின்றனர். இத்தகைய தரப்பினருக்கு நாம் அவசியம் உதவ வேண்டியுள்ளது என அவர் மேலும்  சொன்னார்.

அவ்வட்டார மக்களின் வசதிக்காக இந்த மலிவு விற்பனையை பி.கே.பி,எஸ். இத்தொகுதியில் அடிக்கடி நடத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் கூறினார்.


Pengarang :