ECONOMYSELANGOR

மலிவு விற்பனையின் வழி 50 வெள்ளியில் அதிகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு- பொதுமக்கள் மகிழ்ச்சி

சுபாங் ஜெயா, மே 29- அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டம் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் வசிக்கும் பகுதிகளில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் அத்தரப்பினர் செலவுகளை கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவின அதிகரிப்பின் பாதிப்பை தணிக்க இயலும் என்று அரசு ஊழியரான நோரிசா மன்சோர் (வயது 47) தெரிவித்தார்.

லெம்பா சுபாங் 1 பகுதியை உதாரணம் காட்டிய அவர், பெரும்பாலும்  சாதாரண  வேலை செய்யும் இப்பகுதி மக்கள் இதுபோன்ற மலிவு விற்பனையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர் என்றார்.

இன்று வேலை நாளாக இருந்த போதிலும் சிறிது  நேர அவகாசத்தைப் பெற்று பொருட்களை வாங்க இங்கு வந்தேன். இந்த வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. இந்த விற்பனை மூலம் என்னால் ஓரளவு மிச்சப்படுத்த முடிந்தது என்றார் அவர்.

இதனிடையே, கோழி, முட்டை மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் இந்த திட்டம் அனைவருக்கும் நல்ல பலனைத் தந்துள்ளது என்று துப்புரவுப் பணியாளரான திருமதி சி. சாரதா (வயது 59) கூறினார்.

இங்கு பொருட்களை வாங்க நான் 50 வெள்ளியுடன் வந்தேன். சந்தையை விட குறைந்த விலையில் விற்கப்படும் காரணத்தால் பொருட்கள் விரைவாக விற்றுத் தீர்ந்து விடுமோ என்ற கவலை எனக்கு இருந்தது.

வெளியில் ஒரு கோழியின் விலை 20.00 வெள்ளி. ஆனால் இங்கு 10.00 வெள்ளிக்கு கிடைக்கிறது. அதே போல் வெளியில் 16.00 வெள்ளிக்கு விற்கப்படும் முட்டை இங்கு 10.00 வெள்ளிக்கு நான் வாங்கினேன் என்றார் அவர்.


Pengarang :