NATIONAL

இரு குழுக்களிடையே ஏற்பட்ட சண்டையால் 13 பேர் கைது

கோலாலம்பூர், ஜூன் 2: மோட்டார் சைக்கிள் சத்தத்தால் அதிருப்தி அடைந்து இரு குழுக்களிடையே சண்டை ஏற்பட்டது. அதன் தொடர்பில் மூன்றாம் படிவ மாணவர் உள்பட 13 பேரைக் காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

15 முதல் 26 வயதுக்குட்பட்ட அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12.05 மணி அளவில் அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர் என அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர், ஏசிபி மொஹமட் ஃபரூக் எஷாக் கூறினார்.

“மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி சத்தம் எழுப்பிய மற்ற குழுவினரின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்ததால் இரு குழுக்களிடையே சண்டை ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிருப்தி கொண்ட குழு அச்செயலை கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தலைக்கவசத்தை பயன்படுத்தி இரு குழுக்களிடையே சண்டை ஏற்பட்டது. அதில் மூவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்ட அவர்கள் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் உணவு விநியோகம் செய்பவர்கள், விற்பனை உதவியாளர்கள் மற்றும் வேலை இல்லாதவர்கள் இருந்தனர். சிறுநீர் பரிசோதனையில் சந்தேகத்திற்குரியவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை எனக் கண்டறியப் பட்டதாக மொஹமட் ஃபரூக் கூறினார்.

அவர்களில் 20, 21 மற்றும் 26 வயதுடைய மூவர் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தப்பட்ட கடந்தகாலக் குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

– பெர்னாமா


Pengarang :