ANTARABANGSA

காஸா மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான உடல்கள்- விசாரணை நடத்த பாலஸ்தீனம் கோரிக்கை

துபாய், ஏப் 26 – காஸா மருத்துவமனையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும்  போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. விசாரிக்க வேண்டும் என்று பாலஸ்தீன  சிவில் பாதுகாப்பு குழு நேற்று  கோரிக்கை விடுத்தது.

இஸ்ரேலிய வீரர்கள் அந்த மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறிய பின்னர் பெரும் புதைகுழிகளிலிருந்து கிட்டத்தட்ட 400 உடல்கள் மீட்கப்பட்டதாக அது  கூறியது.

“நாசர் மருத்துவ வளாகத்தில் அறுவை சிகிச்சை கவுன்களை அணிந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த சில  நோயாளிகள்   கள மரண தண்டனை பாணியில் கொல்லப்பட்டதற்கான சான்றுகளும்  உள்ளன என்று சிவில் பாதுகாப்புப் படை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.

கான் யூனிஸ் நகரிலிருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் வெளியேறிய பின்னர் மத்திய காஸாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான உடல்கள் பெரும் புதைகுழிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள்  இந்த வாரம் கூறினர்.

இஸ்ரேலிய சிறப்புப் படை நடவடிக்கைக்கு இலக்கான வட காஸாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையிலும்  உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசர் மற்றும் அல் ஷிஃபா மருத்துவமனைகளில் பெரும் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் குறித்து தாம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானதாக ஐ.நா. உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் செவ்வாயன்று  தெரிவித்தார்.

இந்த தகவல்கள் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக கூறிய பிரான்ஸ், சுயேச்சை விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தியது

இதனிடையே, தங்கள் பாதுகாப்புப் படைகள்  உடல்களை புதைத்ததாகப் பாலஸ்தீன அதிகாரிகள்  கூறுவது “அடிப்படையற்றது மற்றும் ஆதாரமற்றது” என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியது .


Pengarang :