SELANGOR

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சிலாங்கூர் மாநிலமே உந்து சக்தி- அமைச்சர் ரபிஸி கூறுகிறார்

ஷா ஆலம், ஜூன் 2- வரும் 2028ஆம் ஆண்டுவாக்கில் உயர் வருமானம்
பெறும் நாடாக மலேசியாவை மாற்றும் இலக்கிற்கேற்ப நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக விளங்கி வரும் சிலாங்கூர்
மாநிலத்தின் மேம்பாடு மேலும் முடுக்கி விடப்பட வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கம் சிலாங்கூரை பெரிதும் சார்ந்துள்ளதோடு
இம்மாநிலத்தில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை அமல்படுத்த
வேண்டிய அவசியத்தையும் கொண்டுள்ளதாகப் பொருளாதார அமைச்சர்
ரபிஸி ரம்லி கூறினார்.

மலேசியாவை முன்னோக்கி கொண்டுச் செல்லக்கூடிய திட்டங்களும்
முன்னெடுப்புகளும் சிலாங்கூர் மாநிலத்திலிருந்துதான் தொடங்க
வேண்டியுள்ளது. இதன் காரணமாகச் சிலாங்கூர் மற்றும் கூட்டரசு
அரசுகளின் திட்டங்கள் இணையாக இருப்பதற்கு ஏதுவாக நாம் ஒருமித்த
நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதே போன்ற மேம்பாட்டு நிலையை நாம் தொடர்ந்தால் வரும் 2026
அல்லது 2027 அல்லது கூடிய பட்சம் 2028ஆம் ஆண்டுவாக்கில் மலேசியா
உயர் வருமானம் பெறும் நாடாகப் பிரகடனப்படுத்தப்படும் என்றார் அவர்.

பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் மத்திய காலத் தவணைக்கான
ஆய்வு தொடர்பில் நிதியமைச்சுக்கும் சிலாங்கூர் அரசுக்கும் இடையே
நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில அரசு
செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.

துரித மேம்பாட்டுக்கு மத்தியில் வீட்டுடமைப் பிரச்சனை, அடர்த்தியான
மக்கள் தொகை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து உள்ளிட்ட
பிரச்சனைகளையும் சிலாங்கூர் எதிர்நோக்க வேண்டி வரும் என ரபிஸி
தமதுரையில் குறிப்பிட்டார்.


Pengarang :